எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தால், மீண்டும் பொருட்களின் விலைகள் உயர்வடையும் – ரஞ்சித் மத்தும பண்டார


Published by T. Saranya on 2021-10-14 11:00:41

(நா.தனுஜா)

அமைச்சர் உதய கம்மன்பிலவின் கருத்தை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், வெகுவிரைவில் எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கக்கூடும் என்றே தோன்றுகின்றது. எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தால், மீண்டும் பொருட்களின் விலைகள் உயர்வடையும்.  நல்லாட்சி அரசாங்கத்தின்கீழ் எரிபொருட்களின் விலைகள் 4 ஆண்டுகள் ஒரே மட்டத்தில் பேணப்பட்டன.

ஆனால் அவசரகாலச்சட்ட உத்தரவு, அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் தொடர்பான வர்த்தமானி வெளியீடு உள்ளடங்கலாகப் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தும்கூட தற்போதைய அரசாங்கத்தினால் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

தற்போது தீவிரமடைந்திருக்கும் அதிபர், ஆசிரியர் சம்பளப்பிரச்சினை 1994 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமான போதிலும், அதன்பின்னர் சுமார் 25 வருடங்கள் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களினால் அதற்குரிய தீர்வை வழங்கமுடியாமல்போனது. அந்தவகையில் 2015 இல் நல்லாட்சி அரசாங்கம் ஆசிரியர்களுக்கு மிகக்குறைந்த சம்பள அதிகரிப்பை வழங்கியது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், எமது நாட்டின் ஆசிரியர்கள் மிகக்குறைந்தளவிலான ஊதியத்தையே பெறுகின்றார்கள்.

இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கம் அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையின் பிரகாரம் கடந்த 2020 ஜனவரி மாதம் முதல் அதிகரித்த கொடுப்பனவை ஒரேதடவையில் வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதியைப் பெற்றிருந்தது. ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த அமைச்சரவை அனுமதியை இரத்துச்செய்து, 2022 ஆம் ஆண்டில் மூன்றில் இரண்டு என்ற அடிப்படையில் கொடுப்பனவுகளை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது. ஆசிரியர்களை ‘மிகவும் மோசமானவர்கள்’ என்று விமர்சித்த தற்போதைய அரசாங்கம், அவர்களது பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கமுடியாது.

அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, அதனால் மறுபுறம் மாணவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் இருவருடகாலமாக மாணவர்களுடைய கல்விச்செயற்பாடுகள் முழுமையாகத் தடைப்பட்டுள்ளன. கொவிட் – 19 தொற்றினால் வீதிகளில்கூட மரணங்கள் சம்பவிக்கும் அளவிற்கு மிகமோசமான நிலையிலிருந்த இந்தியாவில்கூட தற்போது பாடசாலைகள் மீளத்திறக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் எமது நாட்டில் அரசாங்கத்தின் முறையற்ற கொள்கைகள் மற்றும் தவறான தீர்மானங்களின் விளைவாக எதிர்கால சந்ததியினரின் கல்விச்செயற்பாடுகள் சீர்குலைந்துள்ளன. எனவே இயலுமானவரை விரைவாக அதிபர், ஆசிரியர்களின் சம்பளப்பிரச்சினைக்குரிய தீர்வை வழங்கி, பாடசாலைக்கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

மறுபுறம் அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளன. பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தியிருப்பதாக அரசாங்கம் கூறினாலும், பொருட்களை உற்பத்திசெய்யும் நிறுவனங்கள் மற்றும் பெருவணிகர்களால் விலைகள் அதிகரிக்கப்படுகின்றன.

அத்தியாவசியப்பொருட்களின் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்குமெனக்கூறி இருமாதங்களுக்கு முன்னர் அவசரகாலச்சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் அதனால் எந்தவொரு பயனும் ஏற்படவில்லை. இவ்வாறு பொருட்களின் விலைகளைக்கூடக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசாங்கமொன்று இயங்கவேண்டியதன் அவசியமென்ன? பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திடம் டொலர் இல்லை என்று கூறுகின்றார்கள். ஆனால் அரசகுடும்ப அங்கத்தவர்களிடம் போதியளவு டொலர் இருக்கின்றது என்பதையே பன்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

அமைச்சர் உதய கம்மன்பிலவின் கருத்தை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், வெகுவிரைவில் எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கக்கூடும் என்றே தோன்றுகின்றது. எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தால், மீண்டும் பொருட்களின் விலைகள் உயரும்.

நல்லாட்சி அரசாங்கத்தின்கீழ் 4 ஆண்டுகள் எரிபொருட்களின் விலைகள் ஒரேமட்டத்தில் பேணப்பட்டன. எனவே இவற்றிலிருந்து தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்துள்ளமை நன்கு வெளிப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும் டயனா கமகே தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், ‘இதுவிடயத்தில் டயானா கமகே அவரது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றார். கட்சியின் கொள்கைகளுக்கு புறம்பாகச் செயற்பட்டமையினால் கட்சியின் ஒழுக்காற்றுக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக்கொண்டு செயற்குழுவின் ஏகமனதான தீர்மானத்திற்கமைய அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இருப்பினும் கட்சியின் அவருக்கும் உரிமை இருக்கின்றது என்று அவர் கூறுகின்றார். அனைத்து பதவிகளிலிருந்தும் அவர் இராஜினமா செய்த கடிதங்கள் எம்மிடம் உள்ளன. இனி அவருக்கு எமது கட்சியில் இடமில்லை. ஆனால் கட்சிக்கு வெளியிலிருந்துகொண்டு விரும்பிய கருத்துக்களை வெளியிடும் உரிமை அவருக்கு இருக்கின்றது என்று தெரிவித்தார். 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வசந்தப்ரியா ராமநாயக்க காலமானார்

Thu Oct 14 , 2021
அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் வசந்தபிரிய ராமநாயக்க காலமானார்.   Source link

You May Like

Breaking News

Translate »