உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் வேகம்! மாஸ்டர் பிளான் அறிமுகம் செய்து மோடி உறுதி


புதுடில்லி :நாடு முழுதும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் புதிய வேகம் மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து செயல்படுத்தும், ‘பி.எம்.கதி சக்தி தேசிய மாஸ்டர் பிளான்’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிமுகம் செய்தார்.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தன்று ஆற்றிய உரையின்போது, ‘100 லட்சம் கோடி ரூபாய் செலவில், முழுமையான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ‘பி.எம். கதி சக்தி தேசிய மாஸ்டர் பிளான்’ எனும் திட்டம் செயல்படுத்தப்படும்’ என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இந்நிலையில், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் வேகத்தை அதிகரிக்கும், மாஸ்டர் பிளான் எனப்படும் முதன்மை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது:

உள்கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்துவதில், ஒவ்வொரு துறைகளும் தனித்தனியாக செயல்பட்டதுடன், மெத்தனமாகவும் இருந்ததால், வரி செலுத்துவோரின் பணம் அவமதிக்கப்பட்டு வந்தது. நாட்டின் வளர்ச்சி என்பது, தரமான உள்கட்டமைப்பு வசதிகளில் தான் உள்ளது.போதிய வசதிகள் இல்லாததால், கையாளும் மற்றும் போக்குவரத்து செலவு அதிகரித்து, பொருட்களின் விலை உயர்ந்தது. மேலும், ஏற்றுமதி செய்வதற்கு மற்ற நாடுகளுடன் போட்டியிட முடியாத நிலையும் இருந்தது.

இந்த கூடுதல் செலவுகள் மட்டும், நாட்டின் மொத்த உற்பத்தியில், 13 சதவீதமாக உள்ளது.தற்போது 21வது நூற்றாண்டில் அனைத்தும் வேகமாக மாறி வருகிறது. அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், அதை செயல்படுத்துவதிலும் புதிய மாற்றம் தேவை.அதன்படியே, இந்த முதன்மை திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்படி, சாலையில் இருந்து ரயில்வே வரை, விமானப் போக்குவரத்தில் இருந்து விவசாயம் வரை என, பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து திட்டங்களை செயல்படுத்தும்.இதில் மாநில அரசுகளும் இணைந்து கொள்ள வேண்டும்.

அடுத்த சில ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து முன்னதாகவே திட்டமிட்டு, ஒருங்கிணைத்து, சீரிய முறையில் செயல்படுத்தப்படும். இதன் மூலம், மக்களின் வரிப் பணம் வீணாவது தடுக்கப்படும்.அத்துடன் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுவதுடன், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அன்னிய முதலீடுகள் அதிகரிப்பதுடன், நம்முடைய ஏற்றுமதியும் அதிகரிக்கும்.நாடு சுதந்திரம் அடைந்து, 70 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை, நாங்கள், ஏழு ஆண்டுகளில் அளித்துள்ளோம். நாட்டில், இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கும் திட்டம், 1987ல்
துவங்கியது.

கடந்த, 2014ம் ஆண்டு வரை, 15 ஆயிரம் கி.மீ., தூரத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட்டன. நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றப் பிறகு இதுவரை, 16 ஆயிரம் கி.மீ., தூர குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.கடந்த, 2014க்கு முன், நாடு முழுதும், 1,900 கி.மீ., தூர ரயில் பாதைகளே இரட்டை பாதைகளாக மாற்றப்பட்டன. அதுவே, கடந்த, ஏழு ஆண்டுகளில், 9,000 கி.மீ., ரயில் பாதை இரட்டை பாதையாக மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு பல உதாரணங்களை கூறலாம்.
முன்பெல்லாம், உள்கட்டமைப்பு வசதிகள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தி, முடிப்பதற்கு அதிக காலமாகும். ஆனால், தற்போது கால நிர்ணயம் செய்து திட்டங்கள் துவக்கப்படுகின்றன.
திட்டமிட்ட காலத்துக்கு முன்பே முடிப்பதுதான் எங்களுடைய அடுத்த இலக்கு.

வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இதுவரை எந்தக் கட்சியும் கவலைப்பட்டதில்லை. அவர்களுடைய தேர்தல் அறிக்கைகளிலும் அவை இடம் பெற்றதில்லை. தற்போது நாம் வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொண்டால், அதை விமர்சிக்கிறார்கள். இந்த திட்டம் தேவையா என்று கேள்வி மட்டும் எழுப்புகின்றனர்.ஜன்தன், ஆதார், மொபைல் போன் இணைப்பு மூலம், அரசின் வளர்ச்சி திட்டப் பயன்கள் மக்களுக்கு நேரடியாக சென்றடைய செய்தோம். அதுபோல, உள்கட்டமைப்பு துறையில் இந்த புதிய முதன்மை திட்டம் இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

பிரதமர் மோடி அறிமுகம் செய்துள்ள, 100 லட்சம் கோடி ரூபாய் கதி சக்தி தேசிய மாஸ்டர் பிளான் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

* நாடு முழுதும் உள்ள, 1,200 தொழில் பூங்காக்கள் இணைக்கப்படும்

* நாடு முழுதும் உள்ள, 11 தொழில் வழிப் பாதைகளும், உத்தர பிரதேசம் மற்றும் தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள ராணுவ தொழில் வழிப் பாதைகளும் இணைக்கப்பட உள்ளன

* ‘அடுத்த 25 ஆண்டுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது’ என, மோடி குறிப்பிட்டுள்ளார்

* இந்த திட்டத்தின் கீழ், ரயில்வே, சாலை உள்பட, 16 மத்திய அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளன

* அனைத்து கிராமங்களுக்கும், ‘4 ஜி’ இணைய சேவை

* 2 லட்சம் கி.மீ., தூர நெடுஞ்சாலைகள்* புதிதாக 220 விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து முனையங்கள் அமைய உள்ளன.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கிரிக்கெட் நிர்வாகத்தில் ஈடுபட விருப்பம் இல்லை என்று ரோஹிதா கூறுகிறார் - சிறந்த கதை விளையாட்டு 1

Wed Oct 13 , 2021
முன்னாள் கிளப் ரக்பி வீரர் ரோஹித ராஜபக்ச, வரவிருக்கும் இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) மேஜர் லீக் 50-ஓவர் போட்டியில் விளையாட விரும்பவில்லை என்று மறுத்தார், டிசம்பர் மாதம் லங்கா பிரீமியர் லீக்கில் (எல்பிஎல்) பங்கேற்க ஏலம் எடுக்கிறார் என்ற ஊடக அறிக்கைகளையும் சுட்டுவிட்டார். அல்லது சாத்தியமான கிரிக்கெட் நிர்வாகம். பிரதம மந்திரி மகிந்த ராஜபக்சவின் இளைய மகன், ரோஹிதா ரக்பியுடன் நீண்டகால தொடர்பு கொண்டிருந்தார், கடற்படையின் எஸ்சி, ஆர்மி எஸ்சி […]

You May Like

Breaking News

Translate »