5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான குற்றப் பகிர்வுப் பத்திரத்தை மீளப் பெற சட்டமாதிபர் தீர்மானம்


Published by T. Saranya on 2021-10-13 19:46:40

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில், கொழும்பு,  ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்றில் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பகிர்வு பத்திரத்தை வாபஸ்  பெற சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச சட்டவாதி  கலாநிதி அவந்தி பெரேரா நேற்று மேன் முறையீட்டு  நீதிமன்றுக்கு அறிவித்தார்.

முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, மேன் முறையீட்டு நீதிமன்றில் கொழும்பு,  ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்ற வழக்கு விசாரணைகளை நிறுத்துமாறு கோரி தாக்கல் செய்துள்ள ரீட் மனு மீதான பரிசீலனைகள் நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்றது.

இதன்போதே சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட  அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா இதனை அறிவித்தார்.

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இதனை சிரேஷ்ட அரச சட்டவாதி தெரிவித்தார். அத்துடன் இது தொடர்பில் குற்றப் பகிர்வு பத்திரம் மீது விசாரணை நடாத்தும் கொழும்பு ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்றுக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது மன்றில் ஆஜரான  குறித்த ரிட் மனு தொடர்பில் இடையீட்டு மனுதாரர்களாக தலையீடு செய்துள்ள, சம்பவத்தில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுடன்  மன்றில் ஆஜரான சட்டத்தரணி  நுவன் போப்பகே சட்ட மா அதிபர் மனுதாரருக்கு எதிரான  குற்றப் பகிர்வுப் பத்திரத்தை  மீளப் பெறுவதற்கான காரணத்தை மன்றுக்கு அறிவிக்க வேண்டும் என கோரினர்.

இவ்வாறான நிலையில், குற்றப் பத்திரிகையை மீளப் பெருவது தொடர்பில் ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்றுக்கு அறிவிக்க, சட்ட மா அதிபர் தரப்புக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்தது.

இவ்வாறான நிலையில், இந்த ரிட் மனு மீதான பரிசீலனைகள் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்ப்ட்டது.

முன்னதாக கடந்த 2020 ஜூன் 26 ஆம் திகதி  மேன் முறையீட்டு நீதிமன்றின் அப்போதைய தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ், சோபித்த ராஜகருணா ஆகிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் வசந்த கரன்னாகொடவின் ரிட் மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை செல்லுபடியாகும் வண்ணம் ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்ற விசாரணைகளுக்கு  இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில்,  சிறப்பு மேல் நீதிமன்றம் முன்னெடுக்கும் விசாரணைகளை நிறுத்துமாறு கோரும், வசந்த கரன்னகொடவின் ரீட் மனுவில் சட்ட மா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.

முன்னதாக தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக காட்டிக்கொண்டு, எந்த பயங்கரவாத செயல்களுடனும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புபடாத அப்பாவி சிவிலியன்களை கடத்திச் சென்று  இரகசியமாக தடுத்து வைத்து, கப்பம் பெற முயற்சித்து இறுதியில் அந்த 11 பேரையும்  கொலை செய்தமை தொடர்பில் மூவர் கொண்ட ட்ரயல் அட்பார்  விஷேட மேல் நீதிமன்றில்  வழக்கு தொடரப்பட்டுள்ளது.  கொலை செய்ய சதி செய்தமை,  அதற்காக கடத்தியமை,  உடைமைகளை கொள்ளையிட்டமை,  பலாத்காரமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமை, காணாமல் ஆக்கியமை, அது தொடர்பிலான சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட 667 குற்றச்சாட்டுக்கள் இந்த 14 பிரதிவாதிகளுக்கும் எதிராக சட்ட மா அதிபரால் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனை விசாரிக்க மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்னத்தின் தலைமையின் கீழ் மேல் நீதிமன்ற நீதிபதிகளான  அமல் ராஜகருணா, நவரத்ன மாரசிங்க ஆகியோரை உள்ளடக்கியதாக இந்த சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் பிரதம நீதியரசரால்  அமைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியாக­ராஜா ஜெகன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இவை அனைத்தும் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் திகதிக்கும் 2009 ஆம் ஆண்டு  செப்டம்பர் 21 ஆம் திகதிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக சட்ட மா அதிபரின் குற்றப் பத்திரிகையில் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய வதை முகாமான கன்சைட் எனும்  தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த விடயம் சர்வதேச அளவில் அவதானிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரண்­ணா­கொடவின் பாதுகாப்பு உத்தியோகத்தரான சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன் கொமான்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமான்டர்ராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, கடற்படை சிப்பாய் லக்ஷ்மன் உதயகுமார,  நலின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக தர்மதாஸ , கித்சிரி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த தற்போது ஓய்வுபெற்ற  ரியர் அத்மிரால்  டி.கே.பி. தஸநாயக்க, கடற்படை வீரர்களான கஸ்தூரிகே காமினி, அருணதுஷார மெண்டிஸ், சஞ்ஜீவ பிரசாத் திலங்க சேனராத்ன, அண்னச்சி எனப்படும் உபுல் சமிந்த,  ஹெட்டி ஹெந்தி,  என்டன் பெர்ணான்டோ, சம்பத் ஜனக குமார,  ஆகியோர் கைதாகி தற்போது  பிணையில் உள்ளனர். முன்னாள் கடற்படை தளபதியை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில் அவர் இந்த விவகாரத்தின்  16 ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டார். 17 ஆவது சந்தேக நபராக கடற்படை சிப்பாய் அலுத்கெதர உப்புல் பண்டார  கைது செய்யப்பட்டிருந்தார். எவ்வாறாயினும்  சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்ட 17 பேரில் 14 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் மேல் நீதிமன்றில் குற்ரப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்தார்.

17 ஆவது சந்தேக நபரான கடற்படை சிப்பாய் அலுத்கெதர உப்புல் பண்டார உள்ளிட்ட மூவர் அரச சாட்சியாக  மாற்றப்பட்டனர். அளுத் கெதர உபுல் பண்டாரவே  கன்சைட் முகாமில் குறித்த கடத்தப்பட்டவர்கள் இருந்த போது வீட்டாருடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள உதவியதாக விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனைவிட லக்ஷ்மன் உதயகுமார மற்றும் தம்மிக தர்மதாஸ ஆகிய இரு கடற்படை உளவுப் பிரிவின் உத்தியோகத்தர்களையும் அரச சாட்சியாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன் கொமான்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த கொமான்டர் சுமித் ரணசிங்க, கடற்படை புலனாய்வுப் பிரிவின் நலின் பிரசன்ன விக்ரமசூரிய,கித்சிரி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த ஓய்வு பெற்ற ரியர் அத்மிரால்  டி.கே.பி. தஸநாயக்க, கடற்படை வீரர்களான கஸ்தூரிகே காமினி, அருணதுஷார மெண்டிஸ், நேவி சம்பத் எனும் லெப்.கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சி,சஞ்ஜீவ பிரசாத் திலங்க சேனராத்ன, அண்னச்சி எனபப்டும் உபுல் சமிந்த,  ஹெட்டி ஹெந்தி,  என்டன் பெர்ணான்டோ, சம்பத் ஜனக குமார ஆகிய 14 பேர் இந்த சிறப்பு மேல் நீதிமன்ற வழக்கில்  பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே தற்போது வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப் பகிர்வுப் பத்திரத்தை மீளப் பெற சட்டமாதிபர் தீர்மானித்துள்ளார். 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 அதிகாரப்பூர்வமாக மறைக்கப்பட்ட கண்டறியும் துறைமுகத்தை ஒதுக்குகிறது

Wed Oct 13 , 2021
ஆப்பிள் வாட்ச் கண்டறியும் துறைமுகம் அதன் முதல் மாடலில் இருந்து அணியக்கூடிய வரிசையின் ஒரு மர்மமான பகுதியாக இருந்தது, ஆனால் புதிய சீரிஸ் 7 அதிகாரப்பூர்வமாக ஆறு முள் துறைமுகத்தை முற்றிலுமாக கைவிடுகிறது. நோயறிதலுக்கான உள் பயன்பாட்டிற்காக, போர்ட் அதிகாரப்பூர்வமாக ஆப்பிளின் வலைத்தளம் அல்லது ஆவணத்தில் ஒப்புக்கொள்ளப்படவில்லை. ஆனால் கண்டறியும் துறைமுகம் வன்பொருள் பாகங்கள் மூலம் ஆப்பிள் வாட்சை விரிவாக்கும் சாத்தியத்தை சுருக்கமாக சுட்டிக்காட்டியது. இவற்றில் மிகவும் பிரபலமானவை ரிசர்வ் […]

You May Like

Breaking News

Translate »